Tuesday, February 06, 2007

திருமூலர் திருமந்திரம் - ஒழுக்கம்

'நான்' எனும் அகந்தை தானொழிய வேண்டும்


தானே விடும்பற்(று) இரண்டு தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர் ஆகுதிஅவி உண்ணவே.


தானாக விடுபட்டு விலகும் பற்றுகள் இரண்டு. ஒன்று அகப் பற்று. மற்றொன்று புறப்பற்று. இந்த இரண்டும், இறை உணர்வை மனதில் கொள்ள (தரித்திட)த் தாமாகவே விலகிப் போகும் (தானே விடும்). 'நான்' என்னும் ஆணவம் விடுபட, மற்ற அகங்காரங்கள் எல்லாம் பட்டு விடும் - கெட்டழியும். பிறகு உள்ளம் வேறொன்றையும் அடைய விரும்பாது. பூமேவு நான்முகனும் - தாமரைப் பூவிலிருக்கும் நான்முகனாகிய பிரமன், புண்ணிய மூர்த்தியாய் விளங்குவது, ஓமேவும் - ஓமத்தீயிலே இடப்படும், ஓர் ஆகுதி - அவியை, உண்ணவே - உண்ணுவதற்காகவே.


கண்ணாடி போலக் கடவுளைக் காணலாம்


எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.


எண்ணாயிரம் ஆண்டுக் காலம் தவயோகம் புரிந்தாலும், கண் போன்றவனை, உண்ணத் தெவிட்டாத அமுதினைப் போன்றவனைக் கண்கொண்டு கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், உள்நாடி உள்ளே - சுழுமுனை நாடி உள்ளே ஒளிவடிவாக இருப்பவனை, அகக்கண் கொண்டு பார்த்தால், அப்பரம் பொருள்; கண்ணாடி போல - கண்ணாடியில் காண்பதைப் போல, கண்ணாடி ஒளிபோல, கலந்து நின்றானே - கண்ணுக்குள் காணக் கலந்து நிற்பான்.

1 comment:

Unknown said...

vrygood