பிறவிப் பயன்
நயனம் இரண்டு நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர்அற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயன்இது காயம் பயம்இல்லை தானே.
நயனம் - கண். இரண்டு கண்களையும் மூக்கின் நுனியில் பொருத்திப் பார்த்து; உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கி - உயருகின்ற, தாழ்வடையாத பிராணக் காற்றை உள்ளே அடக்கி; துயர்அற நாடியே - துன்பம் தருவதாகிய மனமயக்கங்களை நீக்கித் தியான நிலை பெற, தூங்க வல்லார்க்கு - உணர்வொன்றித் தூக்க நிலையில் யோக நித்திரையில் நிலைப்பவர்க்கு; பயன் இல்லைதானே - அப்படிப் பட்டவர்களுக்குப் பிறவித் துயரும் மரண பயமும் இல்லையாகும். காயம் - உடம்பு.
உள்ளத்துள் ஒளி உதயம்
இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடும் ஆகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம் அதாமே.
மனித மனம் இந்த உலக இச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. அவற்றை அடைய ஏங்கி இளைக்கிறது. எனவே இருட்டறையாக நெஞ்சு உவமிக்கப்பட்டது. உள்ளே - இந்த மனம் இருக்கிற உடன்புக்கு உள்ளே உருவாகிய; மூன்று மண்டலங்களிலும் (அக்கினி,சூரிய, சந்திர) சிந்தை கலந்து இருக்க, துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில் - உச்சித் துளை வழியாகப் பரம்பொருள் சிந்தனையாகிய பற்று வளர முயற்சி தொடந்து மேற்கொள்ளப்படுமானால்; 'இளைப்பின்றி மார்கழி ஏற்றமதாமே' - தடையின்றி, குறைவின்றி, சித்தாகாசத்தில் சிவசோதி தரிசனம் தானே கிட்டும். துளை - கப்பல உச்சி. துருவிடல் -துருவுதல், ஆராய்தல். இளைத்தல் - தடைப்படுதல், சோர்தல் - துயருறுதல். மார்கழி - உதய காலம். ஏற்றம் - பெருமை.
4 comments:
அருமையான செய்திகள் நண்பரே. தொடருங்கள். வாழ்த்துகள்.
இளங்குமரன்
மிக்க நன்றி நண்பரே...
மிகவும் நல்ல விளக்கங்கள்.. நன்றிகள்..
நல்ல தகவல் நன்றி வணக்கம்
Post a Comment