Saturday, August 07, 2010

அலகிலா விளையாட்டு

                                                  ”அலகிலா விளையாட்டு”  - பா.ராகவன்.  சமீபத்தில் படித்தது. இவ்வளவு நாள் இப்புத்தகம் என் கண்ணில் படாமல் இருந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. ஜானகி ராமன் அவர்களின் “அம்மா வந்தாள்” படித்தப்பிறகு இருந்த மன நிறைவு மறுபடியும் இக்கதையின் மூலம் கிடைத்தது. அதில் என்னை பாதித்தவை சில..



”திடீரென்று கூட்டமாக ஒலிக்கிற பிராத்தனை கீதங்கள் ஏதும் கேட்கவில்லை. வெட்டவெளி. பேரமைதி. அவ்வுளவுதான்.

அங்கே நான் கூட இல்லை. என் மனம் மட்டும்தான் இருந்தது. ஒரு தும்பி போல அந்தப் பரந்த வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது மனம். உடலை விட்டு அது எப்போது புறப்பட்டுப் போனது என்று நிச்சியமாய்த் தெரியவில்லை. அடடே! உடலை விட்டு மனம் புறப்பட்டது குறித்துச் சிந்திக்கிறேன் என்றால் இத்தனை நாள் சிந்தனை என்கிற காரியத்தைச் செய்துவந்தது மனம் இல்லையா? உடல் தானா? அல்லது எனக்கு என்றுமே வசப்பட்டிராத என் ஆன்மாவா?

என் ஆன்மா! சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஹிந்து தர்மம் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரே கம்யுனிசச் சிந்தனை அதுதான். ஓர் ஆன்மாதான். ஆனால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்ல எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.”


”முட்டாள்! நீ இறந்த பின் இந்த மனம் உன் கூட வருமொன்றா நினைக்கிறாய்? இத்தனை வருஷங்களாகல் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கவா உன்னை இத்தனை கஷ்டப்பட்டு இயற்க்கை கடைத்தேற்றுகிறது? அந்தப் பக்கம் போன உடனேயே உனக்கு அங்கே புதிய சட்டை போட்டு விடுவார்கள். புதிய பெயர். புதிய உடல். புதிய ஆன்மா. புதிய முகவரி. உன் கேள்விகள் இருதிவரை விடையில்லாதவைகள்.”


“நான் நாத்திகனாக அறியப்பட்டவனே தவிர நாத்திகன் இல்லை என்பது எனக்கே வெகு தாமதமாகத்தான் புரிந்தது”.


“நான் நாத்திகன் இல்லை. தெரியுமா உங்களுக்கு? இது ஆத்திகத்தின் மிகக் கனிந்த நிலை. சடங்குகளைத் துறப்பது. நியதிகளைத் துறப்பது. நிஷ்டைகளைத் துறப்பது. இதன் எல்லையில் இன்னொன்று இருக்கிறது. கடவுளைத் துறப்பது. அது மறுப்பது இல்லை. மறப்பது. என்னை மறந்த நிலையில் கடவுளை நினைப்பதற்குச் சமானம், கடவுளை மறந்து என்னை நினைப்பது. என்னை என்றால் என் உடலை அல்ல. மனத்தை அல்ல. ஆன்மாவையா என்றால் நிச்சியமாகச் தெரியவில்லை.”

- பா.ராகவன்

Sunday, May 02, 2010

மோகனச் சிலை


வராகமலையிலிருந்து வெகு வேகமாக விடுவிடு என்று இறங்கி வந்து வஞ்சி மாநகரை அனைத்தும் சூழ்ந்தும், அம் மாநகரின் வலிய கோட்டையை இடித்து விடுவதுபோல் தனது பேரலைகளால் தாக்கியும், காலைக் கதிரவன் கிரணங்களால் பளபளத்து மின்னியும், தனது ஆற்றலையும் அழகையும் ஒருங்கே இணைத்துக்காட்டி, ஒரு முரட்டு ஆரணங்கைப்போல் காட்சியளித்த ஆமிராவதியின் அற்புத எழிலையும் செயலையும் இதயகுமாரன், நேரம் போவது தெரியமால் தனது கருமை நிறப் புரவியில் சிலையென உட்கார்ந்திருந்தான். பாயுமிடங்களிலெல்லாம் கரை நெடுக ஆமிரம் என அழைக்கப்படும் மாமரக் காடுகளை நிரம்ப உடையதாகையால் ஆமிரா நதியென்று வடமொழியிலும் சிறப்புப் பெயர்களைப் பெற்றதும், கர்ப்பபுரி என்று வடமொழியில் அழைக்கப்பட்ட வஞ்சிமாநகரை அணைத்துக் கொண்டதால் சூதநதியென்றொரு இன்னொரு பெயரை பிங்கல நிகண்டு வால் வழங்கப்பெற்றதும், அதனாலேயே கருவூர் ( கரு-கர்ப்பம்-ஊர்) வஞ்சிக்கும் தனக்குமுள்ள ஒற்றுமையை விளக்கியதுமான சூதநதியான ஆன்பொருநை அன்று காலையில் இதயகுமாரன் இதயத்தில் பழம் பெருமைகள் பலவற்றைக் கிளப்பிவிட்டதால், அவன் கண்களும் அந்த நதியின் அலைகளைவிட அதிகமாகவே பளபளத்தன.

“இத்தகைய நதிகள் பாய்ந்தாலேயே தமிழகம் சீரும், சிறப்பும் வளமும் பெற்றிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் கவிகள் பலரும் தங்கள் பெரும் காவியங்களை ஆற்றுப்படலத்தை முதன்மையாக வைத்துத் துவங்கினார்கள் போலும்!” என்று சிறிது காவிய உணர்ச்சியிலும் இறங்கிய இதயகுமாரன்......


‘மோகனச்சிலை’சோழ சாம்ராஜ்யத்துக்கு விஜயாலயன் வித்திட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற இரண்டைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். ஆனால் சூரியன், சந்திரன் இன்னொரு வலுவான கிரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கிரகணம் பிடிப்பதையோ அதனால் உலகம் இருண்டு போவதயோ யாரும் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால் தமிழக வரலாறு அத்தகைய ஒரு கிரகணத்தை சிருஷ்டித்திருக்கிறது. சூரிய குலத்தவரான சோழர்களையும் சந்திர குலத்தினரான பாண்டியர்களையும் காடவர்களான பல்லவர்களையும், களப்பிரர் என்ற நாடோடி கூட்டத்தார் முறீயடித்து மறைந்து தமிழகத்தை மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஆறாவது நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் அரசாண்டு தமிழக வரலாற்றையே இருள் மூளச் செய்து விட்டார்கள். ஆகவே அந்த ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்கிறோம்.

அந்த இருளை சூரிய குலத்தவனான விஜயாலயன் எப்படிக் கிழித்து தமிழகத்தின் மிகப்பரிய சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரம் அமைத்தான் என்பதை விளக்குகிறது மோகனச்சிலை.

-சாண்டில்யன்.

Sunday, March 21, 2010

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்...

புதுமைப்பித்தன் அவர்களின் படைப்புகளில் மிகவும் கவர்ந்தது....


---------

"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து" என்றார் கடவுள்.

"அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?"

"கந்தசாமிப் பிள்ளையை!"

"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி."

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். "எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது" என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

---------------

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடநயும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

--------------

கடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!"

"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.
- புதுமைப்பித்தன்

Sunday, March 07, 2010

"சாஸ்வதச் சுழற்சித் தத்துவம்"


“நீச்சே சொன்னார்...” நம்புதிரி தொடர்ந்தார். “பொருள் அல்லது ஜடம் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளது. காலமோ முடிவேயில்லாதது. பிரபஞ்சத்தில் உள்ள ஜடம் எவ்வளவு பிரம்மாண்டமான அளவு கொண்டதாய் இருந்தாலும் காலப் பெருவளியின் முன் அதை வைத்தால் மிக அற்பமானது தான் அது.” நம்பூதிரி கையை வீசிக்காட்டிப் பேசினார். “இந்த அறை, மேஜை, புஸ்தகங்கள், நீங்கள், நான், நம் குரல், நம் மொழி வார்த்தைகள், அவற்றின் அர்த்தம் - அனைத்துமே ஜடத்துள் அடங்கிய பல்வேறு எண்ணிலடங்காத கூறுகள் பரஸ்பரம் பின்னியும், இணைந்தும் உருவானவை தாம். பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாச் சம்பவங்களும் ஜடத்தில் ஏற்படும் அலைகள் தாம். எட்டு புறங்கள் கொண்ட கியூபுக்கே பல லட்சம் காம்பினேஷன்கள் உண்டு. பற்பல கோடி காம்பினேஷன்கள் இருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியாத அளவு...”

நம்பூதிரி என்னை உற்றுப் பார்த்தார். “ஆனால் ஜடத்துக்கு எல்லையுண்டு. எனவே அதன் பற்பல துணுக்குகளின் இணைப்புகளினால் ஏற்படும் சம்பவங்களுக்கும் எல்லை உண்டு. காம்பினேஷன்கள் அனந்தகோடி இருக்கலாம். ஆனால் அவை ஒரு நால் நிச்சியம் தீர்ந்து போகும். பிறகு?”

“அய்யோ!” என்றான் பரமு பயத்துடன்.

நம்பூதிரி அவனை அசட்டை செய்து, “பிறகு?” என்றார். “காலத்துக்கு முடிவேயில்லை. அப்போது என்ன ஆகும்? ஒரு முறை நிகழ்ந்த காம்பினேஷன்கள் மீண்டும் நிகழும்; நிகழ்ந்தே ஆகவேண்டும்; இல்லையா? ஜடத்தில் ஏற்ப்படும் பலகோடி காம்பினேஷன்களின் விளைவாய் அப்பன் நம்பூதிரி ஜெயமோகனிடம் பேசும் இந்தச் சம்பவம் நிகழ்கிறது. அப்படியானால் இதே சம்பவம் இப்படியே மீண்டும் நிகழ்ந்தாக வேண்டும். இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்க வேண்டும். இது காலத்தின் முடிவற்ற ஓட்டத்தில் தொடர்ந்து நிகந்தபடியே இருக்கும். இதுதான் எட்டர்னல் ரிகரன்ஸ் தியிரி. சாஸ்வதச் சுழற்சித் தத்துவம். ரொம்ப சிம்பிள்...”

.
.
.
.

“இதெல்லாம் தப்பு” என்றேன்.

“என்னது?” என்றார் ஆவேசமாய்.

“இந்தத் தத்துவம் தப்பு” என்றேன் அழுத்தமாய்.

.
.,
.
.
“தப்பு என்றால்...? என்ன தப்பு? அதைச் சொல்லு.”

“ஜடம் ஒரு அளவுக்கு உட்பட்டது என்றீர்கள். அப்படியில்லை. ஜடமும் காலம் போலவே அளவற்றதுதான்.”

“என்ன உளறுகிறாய்?”

“உங்களுக்கு ஐன்ஸ்டீனைத் தெரியுமா?”

“கேள்விப்பட்டேன்.”

“E = mc2 என்றால் என்ன தெரியுமா? ஜடமும் சக்தியும் ஒன்றுதான் என்ற தத்துவம் அது. ஜடத்தை ஒளியின் வேகத்தின் இரட்டையால் பெருக்கினால் சக்தியின் அளவு கிடைத்துவிடும்.”

நம்பூதிரி பீதி வசப்பட்டு, “அதெப்படி?”. என்றார்.

“போய்ப் படியும். ஜடம் ஒஅளியின் வேகத்தில் நகர்ந்தால் சக்தி ஆகும். சக்தி ஜடமும் ஆகும். சக்திக்கு எல்லையே இல்லை. ஜடத்துக்கும் எல்லை இல்லை.”

“ஐன்ஸ்டீன் சொல்வது தப்பு.”

.
.
.

- ஜெயமோகன்
“ஜகன்மித்யை” சிறுகதையிலிருந்து.

Saturday, February 27, 2010

மனம்...

மனம் எதையும் பிடித்து கொள்ளாமல் இருந்தது. எதையும் சாராமல் இருந்தது. உடம்பை விட்டு எண்ணம் வெளியே நின்று அவரை வேடிக்கை பார்த்தது. இது ஒரு வினோதமான உணர்வு. மனதுக்குள் குடிக்கொண்டிருக்கின்ற நான் என்ற எண்ணம், தான் என்ற அகங்காரம் மெல்ல நகர்ந்து வெளியேறி தன்னைத்தானே வேடிக்கை பார்க்கின்ற ஒரு வினோத அனுபவம். அவருக்கு ஏற்பட்டது. சொல்லவொண்ணா நிம்மதி படர்ந்து.

அடேய்... இதுதானா என்கிற புன்னகை உதட்டில் நெளிந்தது.

கடவுளே.. இப்படி என்னைப் பார்க்கவே தெரியவில்லையே. தேவையற்று நிறைய பேசியிருக்கிறேனே. அனாவசியமாய் நிறைய உளறியிருக்கிறேனே. கொஞ்சம் கூட எவரும் கேட்காமல் தன்னைப் பற்றியே புலம்பியிருக்கிறேனே. புலம்பவும், கேட்கவும், பேசவும் இங்கு எதுவுமில்லையே. எல்லாமும் சரியாகத்தானே இருக்கிறது. எல்லாமும் நேராகத்தானே நடக்கிறது. இது எப்படி நடந்தாலும் எனக்கென்ன கவலை என்று ஒரு மலர்ச்சியை, ஒரு சுதந்திரத்தை அவர் மனம் உணர்ந்தது. மறுபடியும் உடம்புக்குள் போய் மனம் ஒட்டிக் கொண்டது.

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற ஒரு அமைதியை மக்கள் எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எல்லாமும் துன்பமயம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஊனக் கண்களுக்கு இந்த நிம்மதி புரியவில்லை. தனக்குள்ளே பார்க்க எவரும் அறியாதவைகளாக இருக்கிறார்கள். உலகத்தைப் பார்க்க உடம்புக்குள் உட்கார்ந்திருக்கின்ற மனதுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.


உடம்பை உதறி உடம்பிலிருந்து வெளியேறி நின்ற மனம், உடம்பை ஒரு பொருட்டாகக் கருதாத மனம், உடம்பினால் ஏற்படுகின்ற விதிகளை புறக்கணித்துவிட்ட ஒரு மனம், சகலரையும் தெளிவாகப் பார்க்கிறது.

உடம்பில்லாத அந்த மனம், எல்லா உடம்புகளையும் தன் உடம்பாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த மனம் தன்னை பறவையாய், விலங்காய், தாவரமாய் மற்ற மனிதர்களாய், நண்பர்களாய், எதிரிகளாய், மனைவியாய், மகனாய் பார்க்கிறது. அவர்களின் மனம் பிடிபட, இந்த மனம் மிகத் தெளிவாக, மிக நேர்மையாக அவர்களை அணூகுகிறது. நம்முடைய அணுகுமுறையில் பல்வேறூ சமயம் நேர்மையில்லை. நேர்மையில்லாததால் பொய் தலை விரித்தாடுகிறது. பொய் இடையறாது தலைவிரித்தாடுவதால் எது, என்ன, எப்படி என்பது புரியவேயில்லை. இந்தப் புரியாத புதிர்தான் வாழ்க்கையின் மிகப் பெரிய இம்சை. சகிக்க முடியாத வலி.

மனம் உடம்பிலிருந்து வெளியேறி நிற்பது என்றால் என்ன?

அதை வார்த்தையில் சொல்ல முடியாது. அது புது அனுபவம். திடீரேன்று ஏற்படும் அனுபவம். ஒருமுறை அது ஏற்பட்டுவிட்டால் உலக வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் முற்றிலும் மாறுபாடு அடையும்.

இதுவே ஞானம். இதுவே தெளிவு. இதற்குப் பிறுகு வெகுதூரம்.. வெகுதூரம் கடவுளை நோக்கிப் பயணப்பட வேண்டும். இதைத் தெரியாதவர் கடவுளை நோக்கி ஒரு அங்குலம் கூட எடுத்து வைக்க முடியாது.

சக்கரவாஹம்,
எழுத்து சித்தர் பாலகுமாரன்.