Tuesday, September 29, 2009

இயல்பு பிழை

இளம் காலை பொழுது
சூரியன் சுவடு அறியாத கானகம்
சுற்றிலும் ஒலுங்கில்லா அடர்ந்த மரங்களின் தோற்றம்
தன்னை கானகத்தில் முழுதாய் அர்ப்பனித்திருக்கும் புற்கள்
காய்ந்து போன சுவடு கானக்கிடைக்காத வனம்
பச்சை நிறம் படர்ந்து , பழகிக் களிக்கும் சூழல்
வசியம் செய்யும் ஈர மண் வாசனையை,
சுமந்தபடி வரும் இளந்தென்றல்
நேற்றைய மழையில் தோன்றிய
நாளைய மலர்களின் இளந்தளிர்கள்
சிறுக் குழிகளிடம் சிறை கொண்ட மழை நீர்
மிக சமீபத்தில் அருவியின் உயிரோசை

இவை அனைத்தையும் சுவாசித்தபடி,
துறவு பூண்ட மனதினை வெல்ல நினைக்கும் அறிவுடன்
ஒர் அற்ப ஜீவனாய் நான்.
குறிக்கோளின்றி பாதங்களை பதிவு செய்கிறேன்
இச்சூழலில் காணாமல் போன என்னை பறிசோதித்து
தோற்றது அருவியுன் சாறல்.
அனைந்து போன அறிவோடும்,
தூரம் சென்ற மனதோடும்,
உயிர் வலியை சுமந்த உடலாய் நான்.

என்னை நான் தொலைத்த அந்த கனநேரத்தில்....




என்ன அதிசயம் தூரத்தில் ’மார்கழிப் பூவே..’ பாடலின் துவக்க இசை கேட்கிறது.இப்பொழுது இன்னும் சத்தமாக. விழித்துப் பார்த்தேன். சந்தேகமே இல்லை இது கடமை தவறாத எனது கைப்பேசிதான். அய்யையோ விடிந்து விட்டது.அலுவலகத்துக்கு படையேடுக்க வேண்டும், செயற்கையாய் சிரிக்க வேண்டும், முடியாவிட்டாலும் நடிக்க வேண்டும், இன்னும் பல... அந்த சொற்ப நேரத்திலும் இறைவனை வேண்டுகிறேன் இக்கனவை நினைவாக்க அல்ல , நாளையும் இக்கனவு தொடர வேண்டும் என்று.


- யசோ.

Sunday, April 19, 2009

உயரமாய் நிற்றல், தனித்து இருத்தல்..



நீ கொண்டிருக்கிற எல்லா ஆசைகளையும், நீ கொண்டிருக்கிற எல்லா கர்வங்களையும், நீ கொண்டிருக்கிற எல்லா பிடிப்புகளையும் உதறி எழுந்து நின்றால் உயரமாகி விடுவாய். இவைகளை வைத்திருக்க சுமையால் குறுகிப் போய்த்தான் நிற்பாய்.

பொறாமை என்பது இயலாமையின் வெளிப்பாடு. இயலாமை என்பது திடசித்தம்
இல்லத நிலை. திடசித்தம் இல்லாத நிலை என்பது வைராக்கியம் அற்ற தன்மை.
வைராக்கியம் ஏன் இல்லை என்று யோசித்தால் மனவலுவும, உடல் வலுவும் குன்றியிருத்தல். ஏன் மனவலுவும, உடல் வலுவும் குன்றியிருக்கிறது என்றால்
அப்பியாசங்கள் போதமை ஏன் அப்பியாசங்கள் போதமை என்று யோசித்தால் உன்னைத் தடுக்கி விழவைக்க, அப்பியாசத்திலிருந்ஷயங்கள் இருகின்றன. ஏகாக்கிரகம் இல்லை.


ரிஷிகளும், முனிவர்களும் காட்டில் ஏன் வாழ்கிறார்கள் தெறியுமா?ஏகாக்கிரகம்
கருதியே. காட்டில் கண்களைக் கவர்ந்து இழுக்கின்ற விஷயங்கள் எதுவும் இல்லை. வெறும் பச்சை மணம், சில மிருங்கள் இவைகள் மட்டுமே இருக்கின்றன். சுற்றி வேலியிட்டு திறந்த வெளியில் குடிசைகள் போட்டு அமர்ந்துவிட்டால், வேறு எவருடைய பேச்சுக் குரலும் இல்லாமல், வேறு எவருடைய சிந்தனையும் இல்லாமல் ஒரே புள்ளியி நகர்ந்து விடலாம்.


தனியாய் இருத்தல்:

தனியாய் இருபதுதான், அத்வைதியாக இருப்பதினுடைய அற்புதமான நிலை.
தனியாக இருப்பதுதான் உண்மையாக இருப்பது. உண்மைக்கு மாறாக இருக்கின்ற பொழுதுதான் எவரையேனும் சார்ந்திருக்க வேண்டுமென்ற மயக்கம், மாயை ஏற்படுகிறது. உடம்பைப் பற்றிய சிந்தனை இருக்கும் பொழுதுதான் நான், நீ என்கிற பேதம் ஏற்படுகிறது. நான், நீ என்கிற பேதம் ஏற்படுகிற பொழுதுதான் எதிரி
என்பதும், நண்பன் என்பதும், தாய் என்பதும், தமயன் என்பதும், மனைவி என்பதும், குழந்தை என்பதும் ஏற்படுகிறது.

எல்லாம் ஒன்று என்று இருப்பவன் எவனோடும் ஒட்ட மாட்டான். எல்லாம் ஒரே விஷயத்தின் பல சிதறல்கள் என்று புரிந்தவன் தனியாக இருப்பதற்கு
அஞ்சமாட்டான்.

பரசுராமர் சரித்திரத்தில் இருந்து,
எழுத்து சித்தர் பாலகுமாரன்.

Tuesday, January 27, 2009

எதிர்பாராததின் இன்பம்...

இன்று பிரச்னைக்கெல்லாம் காரணம் - மற்றவர்கள் நாம் எதிர்பார்க்கும்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.

இது சாத்தியமில்லை என்பதை அறிந்துகொண்டால், வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாக வழியில்லை.

உங்கள் மனைவி, நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீகள்.

உங்கள் மனைவிக்கும் அப்படி நினைக்க உரிமை உண்டு.

உங்களால் அப்படி இருக்க முடியுமா?

மற்றவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியே உங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் நினைக்க உரிமை உண்டு.

மற்றவர்கள் எதிர்பார்ப்பின்படி உங்களால் இருக்க முடியுமா?

முடியாதென்றால், மற்றவர்களைப் பற்றி அப்படி நினைக்க உங்களுக்கு ஏது உரிமை?

மனிதர்கள் கயிற்றில் ஆடும் பொம்மைகள் அல்லர். குறிப்பிட்ட வேலைகளிக்காகத் தயாரிக்கப்பட்ட ரோபாட்டுகளும் அல்லர்.

தான் நினைக்கிறபடியே மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் மூடனாக இருக்கிறான். வன்முறையாளனாகவும் இருக்கிறான்.

அவன் படைப்பின் ரகசியத்தை அறியாதவனாக இருக்கிறான்.

படைப்பு என்பதே வகைகளால் ஆனது. வகைகள் வாழ்க்கைக்குத் தேவை.

வகைகளால் இந்த உலகம் அழகாக இருக்கிறது.

உலகம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால் எப்படி இருக்கும்?

உணவில் அறுசுவையை விரும்புகிறோம். உணர்வில் நவரசத்தை விரும்புகிறோம்.

உங்களுக்கு பிடித்த உணவுதான் மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமா?

உங்கள் ரசனைதான் எல்லாருக்கும் இருக்க வேண்டுமா?

வாழ்க்கையில் வகைகளை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எதிர்பாராதவற்றை எதிர்பார்க்க வேண்டும். அவை நேரும்போது எதிர்கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் சிலிர்ப்பை, இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

இந்த உலகத்தை நீங்கள் படைக்கவில்லை. எனவே, நீங்கள் விரும்புகிறபடிதான் இந்த உலகம் இருக்க வேண்டும் என்று நினைக்க உங்களுக்கு உரிமை இல்லை.

-கவிக்கோ அப்துல் ரகுமான்

நடமாடும் கோவில்....

நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் நம் விருப்பத்தைப் பல வழிகளில் வெளிப்படுத்திகிறோம்.

அவருக்கு அன்பளிப்புத் தருகிறோம். எதாவது தேவையென்றால் நிறைவேற்றுகிறோம், துன்பம் நேர்ந்தால் உதவுகிறோம். வீட்டுக்கு அழைத்து, விருந்து தருகிறோம்.

இறைவன்மீது நமக்கு இருக்கும் விருப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது?

திருமூலர் ஓர் அருமையான வழியைச் சொல்கிறார்.

இறைவனுக்கு நீ எதாவது கொடுக்க விரும்பினால், தேவைப்பட்ட மனிதர்களுக்கு கொடு. அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார்.

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”


கோயில்கள் இரண்டு வகை. ஒன்று - மண், மரம், கல் போன்ற பொருள்களால் கட்டுவது. மற்றொன்று மனித உடல்.

படமாடம் என்றால், கூடாரம் என்று பொருள்.

பழங்காலத்தில் ஏதேனும் ஒரு வழிபாடு பொருளை வத்து, அதன்மீது துனி போன்ற பொருள்களால் கூடாரம் போன்று அமைப்பார்கள்.

அதனால் திருமூலர் படமாடக் கோயில் என்கிறார். இங்கே படமாடக் கோயில் என்பது, கட்டப்பட்ட எல்லாக் கோயில்களையும் குறிக்கும்.

‘நடமாடும் கோயில்’ என்ற சொற்களால் ஒரு பெரிய ஞானக் கருத்தை உண்ர்த்த விரும்புகிறார் திருமூலர்.

மனிதனே நடமாடும் கோயிலாக இருக்கிறான்.

“ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் பலன் ஐந்தும் காளா மணிவிளக்கே...”

என்றும் சொல்கிறார் திருமூலர்.

மனித உடல்தான் மகேசனின் ஆலயம் என்பதை உணர்த்துவதற்காகதான், கோயில்கள் மனித உடல் அமைப்பில் கட்டப்படுகின்றன.

மனிதன் தனக்குள்ளேயே இறைவனை வைத்துக்கொண்டு, அவனை வழிபட வெளியே செல்கிறான்.

நடமாடும் கோயில், நடமாடாத கோயிலுக்குப் போகிறது.
உயிருடைய கோயில், உயிரில்லாத கோயிலுக்குப் போகிறது.
கோயில், கோயிலை வண்ங்கிறது.
‘நடமாடும் கோயில்’ என்ற சொற்களில் இவ்வளவும் தொனிக்கிறது.

‘உனக்குள் இறைவன் இருப்பதைப் போலவே, உன் சக மனிதனுக்குள்ளும் இறைவன் இருகிறான். எனவே, இறைவனுக்கு நீ ஏதேனும் தர விரும்பினால், சக மனிதனுக்கு கொடு. அவனுக்கு உள்ளே இருக்கும் இறைவன் அதைப் பெற்றுக்கொள்வான்’ என்கிறார் திருமூலர்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்