Saturday, February 05, 2011

உறவு என்பது...

அசோகமித்திரன் ‘விடுதலை’ குருநாவலில் இருந்து என்னை அதிகம் சிந்திக்க வைத்த வரிகள்....

வாழ்க்கை என்பது அனுவம். அனுபவம் என்பது தன்னை வேறு ஒன்றுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வது. யாரும் தனியே பிரித்து வாழ முடியாது. ஆதலால் வாழ்க்கை என்பது சம்பந்தப்படுத்திக் கொள்வது. சம்பந்தப்படுத்திக் கொள்வதென்பது செயலில் ஈடுபடுவது. வாழ்க்கையாகிய உறவைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை ஒருவர் எப்படிப் பெற முடியும்? சம்பந்தப்படுத்திக் கொள்வது என்பது மனிதர்களோடு மட்டுந்தானா அல்லது வேறு பொருள்களும் கருத்துக்களும் இதில் சேர்த்தியா? வாழ்க்கையே விஷயங்களோடு நம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்வது - இதில் மற்றவர்கள், பொருள்கள், அபிப்பிராயங்கள் எல்லம் சேந்ததுதான், இந்த ‘சம்பந்தப்படுத்திக் கொள்வது’ என்பதைப் புரிந்துகொள்வதில்தான், நாம் வழ்க்கையைப் பூரணமாகவும் சரியாகவும் எதிர்த்து நிற்கக் கூடிய பக்குவத்தைப் பெறுகிறோம். நம் பிரச்சனை உறவை புரிந்துகொள்வது. அது நமக்கு அனுசரிப்பும் விழிப்பும் பொருத்தமான செயல்களில் உடனுக்குடனே உந்தவைக்கும் குணமும் ஏற்படுத்தும்.

நம் வாழ்க்கையைச் சிறிது பரிசோதித்துப் பார்த்தாலும், நாம் மற்றவர்களிடம் கொள்ளும் உறவு முறைகளைத் துளியேனும் கூர்ந்து பார்த்தாலும், எப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர் எதிரிடையாக இருந்து வருகிறோம் என்று தெரியும். உண்மையில் நமக்கு யாரைப் பற்றியும் அக்கறையில்லை. நாம் அதுபற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எவரைப் பற்றியும் அக்கறையும் கிடையாது. நமக்கு அனுகூலமாயிருக்கும் வரை நமக்கு ஓர் அடைக்கலமயிருக்கும் வரை நமக்குத் திருப்தியளிக்கும் வரைதான் நாம் ஒருவரோடு உறவு கொள்கிறோம்.. ஆனால் அதில் சௌகரியம் இல்லை, பயம் இல்லை என்றால் மறுகணம் அந்த உறவை அப்படியே நழுவவிட்டு விடுகிறோம். அதாவது உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரைதான். இதைக் கேட்கும்போது கொடூரமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் கூர்ந்து பரிசோதித்தால் நான் சொல்வது உண்மைதான் என்று விளங்கும். இந்த உண்மையைப் புறக்கணித்திருப்பது அறியாமையில் விழுந்திருப்பதாகும். அறியாமை சரியான உறவை உண்டுபண்ண முடியாது...

உறவு சுய உணர்வூட்டக் கூடியது. தன்னை அறிந்து கொள்ளாமல் தன் மனத்தின், நெஞ்சத்தின் வழிகளைக் கண்டுகொள்ளாமல், வெளிப்படையாக உலகத்தை ஒழுங்குப்படுத்த முயலுவது அர்த்தமற்றது. தான் மற்றொருவரிடம் கொள்ளும் உறவு முறையைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். அப்பொது உள்புதைந்திருக்கும் தந்திரங்கள், குரோதங்கள், அபிலாஷைகள் இவைகளைக் கண்டுகொள்ள முடியும். எப்பொது அவைகளைக் கண்டு கொள்ளுதல் ஆரம்பமாகிறதோ அப்பொதே உங்களுக்குப் புதுவாழ்வு தொடங்குகிறது. அதுதான் விமோசனத்தின், விடுதலையின் முதல் அறிகுறி.

----



                 “உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரைதான்”. 
   

Saturday, August 07, 2010

அலகிலா விளையாட்டு

                                                  ”அலகிலா விளையாட்டு”  - பா.ராகவன்.  சமீபத்தில் படித்தது. இவ்வளவு நாள் இப்புத்தகம் என் கண்ணில் படாமல் இருந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. ஜானகி ராமன் அவர்களின் “அம்மா வந்தாள்” படித்தப்பிறகு இருந்த மன நிறைவு மறுபடியும் இக்கதையின் மூலம் கிடைத்தது. அதில் என்னை பாதித்தவை சில..



”திடீரென்று கூட்டமாக ஒலிக்கிற பிராத்தனை கீதங்கள் ஏதும் கேட்கவில்லை. வெட்டவெளி. பேரமைதி. அவ்வுளவுதான்.

அங்கே நான் கூட இல்லை. என் மனம் மட்டும்தான் இருந்தது. ஒரு தும்பி போல அந்தப் பரந்த வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது மனம். உடலை விட்டு அது எப்போது புறப்பட்டுப் போனது என்று நிச்சியமாய்த் தெரியவில்லை. அடடே! உடலை விட்டு மனம் புறப்பட்டது குறித்துச் சிந்திக்கிறேன் என்றால் இத்தனை நாள் சிந்தனை என்கிற காரியத்தைச் செய்துவந்தது மனம் இல்லையா? உடல் தானா? அல்லது எனக்கு என்றுமே வசப்பட்டிராத என் ஆன்மாவா?

என் ஆன்மா! சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஹிந்து தர்மம் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரே கம்யுனிசச் சிந்தனை அதுதான். ஓர் ஆன்மாதான். ஆனால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்ல எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.”


”முட்டாள்! நீ இறந்த பின் இந்த மனம் உன் கூட வருமொன்றா நினைக்கிறாய்? இத்தனை வருஷங்களாகல் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கவா உன்னை இத்தனை கஷ்டப்பட்டு இயற்க்கை கடைத்தேற்றுகிறது? அந்தப் பக்கம் போன உடனேயே உனக்கு அங்கே புதிய சட்டை போட்டு விடுவார்கள். புதிய பெயர். புதிய உடல். புதிய ஆன்மா. புதிய முகவரி. உன் கேள்விகள் இருதிவரை விடையில்லாதவைகள்.”


“நான் நாத்திகனாக அறியப்பட்டவனே தவிர நாத்திகன் இல்லை என்பது எனக்கே வெகு தாமதமாகத்தான் புரிந்தது”.


“நான் நாத்திகன் இல்லை. தெரியுமா உங்களுக்கு? இது ஆத்திகத்தின் மிகக் கனிந்த நிலை. சடங்குகளைத் துறப்பது. நியதிகளைத் துறப்பது. நிஷ்டைகளைத் துறப்பது. இதன் எல்லையில் இன்னொன்று இருக்கிறது. கடவுளைத் துறப்பது. அது மறுப்பது இல்லை. மறப்பது. என்னை மறந்த நிலையில் கடவுளை நினைப்பதற்குச் சமானம், கடவுளை மறந்து என்னை நினைப்பது. என்னை என்றால் என் உடலை அல்ல. மனத்தை அல்ல. ஆன்மாவையா என்றால் நிச்சியமாகச் தெரியவில்லை.”

- பா.ராகவன்

Sunday, May 02, 2010

மோகனச் சிலை


வராகமலையிலிருந்து வெகு வேகமாக விடுவிடு என்று இறங்கி வந்து வஞ்சி மாநகரை அனைத்தும் சூழ்ந்தும், அம் மாநகரின் வலிய கோட்டையை இடித்து விடுவதுபோல் தனது பேரலைகளால் தாக்கியும், காலைக் கதிரவன் கிரணங்களால் பளபளத்து மின்னியும், தனது ஆற்றலையும் அழகையும் ஒருங்கே இணைத்துக்காட்டி, ஒரு முரட்டு ஆரணங்கைப்போல் காட்சியளித்த ஆமிராவதியின் அற்புத எழிலையும் செயலையும் இதயகுமாரன், நேரம் போவது தெரியமால் தனது கருமை நிறப் புரவியில் சிலையென உட்கார்ந்திருந்தான். பாயுமிடங்களிலெல்லாம் கரை நெடுக ஆமிரம் என அழைக்கப்படும் மாமரக் காடுகளை நிரம்ப உடையதாகையால் ஆமிரா நதியென்று வடமொழியிலும் சிறப்புப் பெயர்களைப் பெற்றதும், கர்ப்பபுரி என்று வடமொழியில் அழைக்கப்பட்ட வஞ்சிமாநகரை அணைத்துக் கொண்டதால் சூதநதியென்றொரு இன்னொரு பெயரை பிங்கல நிகண்டு வால் வழங்கப்பெற்றதும், அதனாலேயே கருவூர் ( கரு-கர்ப்பம்-ஊர்) வஞ்சிக்கும் தனக்குமுள்ள ஒற்றுமையை விளக்கியதுமான சூதநதியான ஆன்பொருநை அன்று காலையில் இதயகுமாரன் இதயத்தில் பழம் பெருமைகள் பலவற்றைக் கிளப்பிவிட்டதால், அவன் கண்களும் அந்த நதியின் அலைகளைவிட அதிகமாகவே பளபளத்தன.

“இத்தகைய நதிகள் பாய்ந்தாலேயே தமிழகம் சீரும், சிறப்பும் வளமும் பெற்றிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் கவிகள் பலரும் தங்கள் பெரும் காவியங்களை ஆற்றுப்படலத்தை முதன்மையாக வைத்துத் துவங்கினார்கள் போலும்!” என்று சிறிது காவிய உணர்ச்சியிலும் இறங்கிய இதயகுமாரன்......


‘மோகனச்சிலை’சோழ சாம்ராஜ்யத்துக்கு விஜயாலயன் வித்திட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற இரண்டைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். ஆனால் சூரியன், சந்திரன் இன்னொரு வலுவான கிரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கிரகணம் பிடிப்பதையோ அதனால் உலகம் இருண்டு போவதயோ யாரும் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால் தமிழக வரலாறு அத்தகைய ஒரு கிரகணத்தை சிருஷ்டித்திருக்கிறது. சூரிய குலத்தவரான சோழர்களையும் சந்திர குலத்தினரான பாண்டியர்களையும் காடவர்களான பல்லவர்களையும், களப்பிரர் என்ற நாடோடி கூட்டத்தார் முறீயடித்து மறைந்து தமிழகத்தை மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஆறாவது நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் அரசாண்டு தமிழக வரலாற்றையே இருள் மூளச் செய்து விட்டார்கள். ஆகவே அந்த ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்கிறோம்.

அந்த இருளை சூரிய குலத்தவனான விஜயாலயன் எப்படிக் கிழித்து தமிழகத்தின் மிகப்பரிய சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரம் அமைத்தான் என்பதை விளக்குகிறது மோகனச்சிலை.

-சாண்டில்யன்.