Saturday, May 03, 2008

நான் ஏன்?

சமீபத்தில் படிக்க நேர்ந்த ரா.கி.ரங்கராஜன் அவர்களின் படைப்பு "நான் ஏன்?". அதில் என்னை மிகவும் கவர்ந்த சுவடு:

"ஒரு மூன்றாவது மனிதரின் நடத்தையோ, குணமோ, செய்கையோ உங்களைப் பாதிக்காதபடி பார்த்துக்கொள்வதுதான் முதலாவது தடுப்பு நடவடிக்கை. இன்னொருவரின் நடத்தை உங்களை ஆட்டிப் படைக்க ஒருபோதும் இடம் தரக்கூடாது. ஒருவன் உங்களுக்குக் கோபம் வரும்படி செய்கிறானென்றால் அவன் உங்களை ஜெயித்துவிட்டான், உங்களை அடிமைப்படுத்திவிட்டான் என்று அர்த்தம். 'நீ என்ன என்னை அடக்குவது?' என்று மனசுக்குள் நினைத்துகொள்ளுங்கள்.ஒரு நபரின் சினத்தால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டால், அவர்மீது எரிச்சல் உண்டானால், உங்கள் சக்தி விணாகிறது. மாறாக, உங்களிடம் அப்படியொரு குறை இருக்கிறதா என்று ஆராய்ந்து பாருங்கள்."


அப்படைப்பில் உள்ள சில தலைப்புகள்:
  • நான் ஏன் என்னயே எல்லோரும் கவனிக்க வேண்டுமென ஏங்குகிறேன்?
  • நான் ஏன் சிலநாள் குஷியாகவும் சிலநாள் வெறுப்பாகவும் இருக்கிறேன்?
  • நான் ஏன் அதை சாப்பிடுகிறேன்?
  • நான் ஏன் மற்றவர்களுக்காகப் பாடுபடுகிறேன் என் வீட்டுக்காகப் பாடுபடுவதில்லை?
  • நான் ஏன் எப்போதும் டி.வி பார்க்கிறேன்?
  • நான் ஏன் முடிவுசெய்ய முடியாமல் திணறுகிறேன்?
  • நான் ஏன் யாரோ என்னைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று பயப்படுகிறேன்?
  • நான் ஏன் எதையும் முழுதாக முடிக்காமல் அரைகுறையாகச் செய்கிறேன்?
  • நான் ஏன் எப்போதும் மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்?
  • நான் ஏன் எந்த பொறுப்பு தந்தாலும் தட்டிக்கழிக்கிறேன்?
  • நான் ஏன் நல்லவனாக இருந்தும் கெட்டபெயர் வாங்குகிறேன்?
  • நான் ஏன் ஸிம்பிளான விஷயத்தைக்கூட சிக்கலாக்கிறேன்?
  • நான் ஏன் சிலபேரைக் கண்டால் எரிச்சல் அடைகிறேன்?
  • நான் ஏன் எதையாவது கைதவறி வைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறேன்?
  • நான் ஏன் எப்போது பார்த்தாலும் சோம்பேறியாக இருக்கிறேன்?
  • நான் ஏன் பிரியமானவர்களுக்கு ஏதோ நேரிடும் என்று பயப்படுகிறேன்?
  • நான் ஏன் எப்பொழுதும் கண்ணாடி முன் நின்றுகொண்டிருக்கிறேன்?
  • நான் ஏன் எந்த வேலையிலும் முழுகவனம் செழுத்துவதில்லை?
  • நான் ஏன் என்னிடம் எப்பொழுதும் குறை காண்கிறேன்?
  • நான் ஏன் பிறரிடம் உதவிகேட்க கூச்சப்படுகிறேன்?
  • நான் ஏன் எப்பொழுதும் தனியாகவே இருக்க விரும்புகிறேன்?

-- ரா.கி.ரங்கராஜன்

Wednesday, February 06, 2008

சந்யாஸ்

"ஸ்வாமிஜி! என் பிரச்சனையே இவன் தான். ஓரே மகன்னு ஆசையைக் கொட்டி வளர்தேன். ஆனா, இவனுக்கு என் மேல கொஞ்சம்கூடப் பாசம் இல்லை. படிக்க மாட்டேங்றான். சொன்ன சொல்லைக் கேக்க மாட்டேங்கிறான். எதுக்கும் உபயோகமா இருப்பான்னு தோணலை. லாயக்கில்லாதவன். எதுக்கும் பிரயோஜனமில்லாதவன்!. பேசாம இவனைக் கூட்டிக்கிட்டு போய் சந்நியாசம் வாங்கிக் குடுத்துடுங்க.."

"ஏம்மா, எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவங்கதான் சந்நியாசி ஆகணுமாம்மா?".. சிரித்துக்கொண்டே அந்தச் சிறிவனை அழைத்தவர். " தம்பி! நானும் உன்னை மாதிரி ஒரு காலத்துல இருந்தவந்தான்" என்று வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார்.

'இவரைப் போய் அழைத்து வந்தோமே. சுத்தப் பரதேசியா இருப்பார் போல இருக்கே' என்று அவள் நினைத்துக்கொண்டேன்.

அவர் போகும் வழியில் நினைத்துச் சிரித்துக்கொண்டார். 'பாவம் அந்தப் பெண்! சந்நியாசம் என்பது தப்பிக்கிறதுன்னு நெனைச்சிருக்கா. அவளுக்கு அது விடுதலைன்னு தெரியலை. விஞ்ஞானம் புரியாதவன் சந்நியாசியில்ல. விஞ்ஞானம் எங்கே முடியும்னு அவனுக்கு தெரியும். கணக்கு வராததால, காவி உடுத்தறவன் இல்ல. கணக்கு எல்லா நேரத்திலேயும் ஓரே விடையத்தராதுன்னு அவனுக்குத் தெரியும். அவனுக்கு கலைகள் பற்றிய புரிதல் அதீதம். அவனால் சிலந்தி வலையிலும் இருத்தலின் இனிமையை உணர முடியும். முடியாததால் விலகுவது அல்ல துறவு. கைக்கு அருகில் வந்ததை வேண்டாம் என்று விலகும் மனநிலை அது. உலகத்திலிருந்து ஓடி ஒதுங்குவது அல்ல சந்நியாசம். அது, உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாக, ஒவ்வொரு துளியாக உள்ளே வாங்கி, நாமே உலகமாக மாறிப்போவது. இப்படி எதுவும் வராதவர்கள் மீது துறவு திணிக்கப்படுவதால்தான், காவியுடை கேவலப்பட்டுப்ப் போனது. அது அவலங்களை மறைக்கும் கேடயமாகவும் கவசமாகவும் மாறிப்போனது.

பாவம்! என்னென்னவோ எதிர் பார்த்திருப்பாள். மடங்கள் முட்டாள்களின் கூடாரமாகவும், வணங்காதவர்களுடைய இருப்பிடமாகவும் மாறினால், துறவு தூஷிக்கப்படுமே அல்லாமல் தொழப்படுமா? வாழ்க்கையின் மீது உள்ள வெறுப்பாலும் விரக்தியாலும் வந்தால், அது எப்படி சந்நியாசமாகும்? அது ஆனந்ததால் அல்லவா முகிழ்க்க வேண்டும். விஞ்ஞானிகளைக் காட்டிலும் கலாரசனையிடனும், இலக்கியவாதிகளைக் காட்டிலும் மொழியின் மேன்மையுடனும், லோகாயதவாதிகளைக் காட்டிலும் பொருள்முதல் வாதத்தைப் புரிந்துகொண்டவர்கள் தான் முழுமையான துறவிகளாக இருக்க முடியும். மகனை பயமுறுத்தக்கூடக் அவள் அப்படிக் கூறியிருக்கக் கூடாது.

அவர் நடந்துகொண்டு இருந்தார். அந்த ஊரைத் தாண்டி அவருடைய கால்கள் போய்க்கொண்டு இருந்தன். எந்த மரம் அவருக்கு அடுத்த அமர்வுக்கு நிழல் தரப்போகிறதோ!..

-வெ.இறையன்பு.

Sunday, October 21, 2007

இந்திரா பார்த்தசாரதி - 'அக்னி' யிடமிருந்து.....




"சமூகப் பொறப்பு!'... இன்னொரு வார்த்தை. 'ஜனநானயகம்'.. கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் நாதத்தில் மயங்கி, நானே என்னை ஏமாற்றிக் கொள்ளும் பருவத்தை நான் தாண்டிவிட்டேன். இதில் இரண்டு நிலைகள் உண்டு. முதலில் தன்னைத்தனே ஏமாற்றிக் கொள்வது.. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமொன்ற உணர்வு வந்த பின், இந்த வார்த்தைகளைக் கொண்டே பிறரை ஏமாற்ற ஆரம்பிப்பது இரண்டாவது நிலை.. இந்தக் காலத்து அரசியல்வாதிகள், புத்திசாலிகள். தொடங்கும் போதே இரண்டாவது நிலையில்தான் தொடங்குகிறார்கள்.

-----------
இதுதான் தமிழ்நாட்டுப் பண்பு போலிருக்கிறது. எதையும் அவநம்பிக்கையோடு அணுக ஆரம்பித்து, பிறகு மனச் சமாதானமடைந்தால் நம்பிக்கை கொள்வது.. எதையும் அவநம்பிக்கையோடு அணுக ஆரம்பித்து, பிறகு மனச்சமாதானமடைவது, நம்பிக்கையோடு அணுக ஆரம்பிப்பது, பிறகு ஏமாற்றமடைவதைக் காட்டிலும், வரவேற்கத்தக்கது.. இது ஒருவருக்கு மனோதத்துவ விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.."

---------
ஒருவன், மற்றவர்களுக்கு மனச்சாட்சித் தொந்தரவு ஏற்படும் வகையில், நல்லவனாக இருந்தால், அவனுக்குச் சிறிது அதிகாரத்தைக் கொடுத்தால் போதும், அவனை அடியோடு கெடுத்து விடுவதற்கு.

----------
அநுபாவத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒருவர் இன்னொருவனை அநுதாபத்தின் காரணமாகப் புரிந்து கொள்ள முயல்கின்றான் என்றால், தன் நியாய உணர்வை ஓரளவு சமரஸப்படுத்திக் கொள்ள முயல்கின்றான் என்றுதான் அர்த்தம்.. நியாய உணர்வு என்பது நிர்தாட்சண்யமானது.. செண்டிமெண்டுகளுக்கு இதில் இடமில்லை.."