Sunday, May 02, 2010

மோகனச் சிலை


வராகமலையிலிருந்து வெகு வேகமாக விடுவிடு என்று இறங்கி வந்து வஞ்சி மாநகரை அனைத்தும் சூழ்ந்தும், அம் மாநகரின் வலிய கோட்டையை இடித்து விடுவதுபோல் தனது பேரலைகளால் தாக்கியும், காலைக் கதிரவன் கிரணங்களால் பளபளத்து மின்னியும், தனது ஆற்றலையும் அழகையும் ஒருங்கே இணைத்துக்காட்டி, ஒரு முரட்டு ஆரணங்கைப்போல் காட்சியளித்த ஆமிராவதியின் அற்புத எழிலையும் செயலையும் இதயகுமாரன், நேரம் போவது தெரியமால் தனது கருமை நிறப் புரவியில் சிலையென உட்கார்ந்திருந்தான். பாயுமிடங்களிலெல்லாம் கரை நெடுக ஆமிரம் என அழைக்கப்படும் மாமரக் காடுகளை நிரம்ப உடையதாகையால் ஆமிரா நதியென்று வடமொழியிலும் சிறப்புப் பெயர்களைப் பெற்றதும், கர்ப்பபுரி என்று வடமொழியில் அழைக்கப்பட்ட வஞ்சிமாநகரை அணைத்துக் கொண்டதால் சூதநதியென்றொரு இன்னொரு பெயரை பிங்கல நிகண்டு வால் வழங்கப்பெற்றதும், அதனாலேயே கருவூர் ( கரு-கர்ப்பம்-ஊர்) வஞ்சிக்கும் தனக்குமுள்ள ஒற்றுமையை விளக்கியதுமான சூதநதியான ஆன்பொருநை அன்று காலையில் இதயகுமாரன் இதயத்தில் பழம் பெருமைகள் பலவற்றைக் கிளப்பிவிட்டதால், அவன் கண்களும் அந்த நதியின் அலைகளைவிட அதிகமாகவே பளபளத்தன.

“இத்தகைய நதிகள் பாய்ந்தாலேயே தமிழகம் சீரும், சிறப்பும் வளமும் பெற்றிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் கவிகள் பலரும் தங்கள் பெரும் காவியங்களை ஆற்றுப்படலத்தை முதன்மையாக வைத்துத் துவங்கினார்கள் போலும்!” என்று சிறிது காவிய உணர்ச்சியிலும் இறங்கிய இதயகுமாரன்......


‘மோகனச்சிலை’சோழ சாம்ராஜ்யத்துக்கு விஜயாலயன் வித்திட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற இரண்டைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். ஆனால் சூரியன், சந்திரன் இன்னொரு வலுவான கிரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கிரகணம் பிடிப்பதையோ அதனால் உலகம் இருண்டு போவதயோ யாரும் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால் தமிழக வரலாறு அத்தகைய ஒரு கிரகணத்தை சிருஷ்டித்திருக்கிறது. சூரிய குலத்தவரான சோழர்களையும் சந்திர குலத்தினரான பாண்டியர்களையும் காடவர்களான பல்லவர்களையும், களப்பிரர் என்ற நாடோடி கூட்டத்தார் முறீயடித்து மறைந்து தமிழகத்தை மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஆறாவது நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் அரசாண்டு தமிழக வரலாற்றையே இருள் மூளச் செய்து விட்டார்கள். ஆகவே அந்த ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்கிறோம்.

அந்த இருளை சூரிய குலத்தவனான விஜயாலயன் எப்படிக் கிழித்து தமிழகத்தின் மிகப்பரிய சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரம் அமைத்தான் என்பதை விளக்குகிறது மோகனச்சிலை.

-சாண்டில்யன்.

No comments: