பிரம்மசூத்திரம் என்பது வேதாந்தம் என்னும் உபநிஷதுகளின் வாக்கியங்களைக் குறிப்பிட்டு 'பிரம்மம்' என்னும் இறுதி உண்மையை அறிய முயழும் சிறிய வாக்கியங்களின் தொகுப்பு. இது பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற எந்தக் கடவுளையும் பற்றியதல்ல. பிரபஞ்சத்தின் இறுது உண்மையையும் ஆதாரத்தையும் ஆரம்பத்தையும் மனித சிருஷ்டியையும் ஜீவனையும் ஆத்மாவையும் வேறுபடுத்திக் காட்டி ஆராயும் பாதராயணரின் நூல்.
பிரம்மசூத்திரம் மூலம் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை. இந்தப் பிரஞ்சம் எப்படி உருவாயிற்று? யாரால் உருவானது? நாம் எப்படி உருவானோம்? இறந்த பின் என்ன ஆகிறோம்? மறுபிறவி எப்படி நிகழ்கிறது? மோட்சம் என்பது என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம்
விடைகளை ஒருவாறு துணிவுடன் தீர்மானிக்க முற்படும் மிக முக்கியமான நூல்.
சங்கரரின்படி, பிரம்ம சூத்திரங்கள் தெரிவிக்கும் முக்கியக் கருத்துகள் மூன்று:
1. பிரம்ம ஒன்றே ஒன்றுதான் உண்மை. அதுவும் 'நாம்' என்னும் ஜீவாத்மாவும் கலந்து வேறுபாடே இல்லாத ஒன்றே.
2. பெயர், உரு இவைகளால் வெவ்வேறு பொருள்களாய் காணும் இவ்வுலகம் தோற்றமே. காலம், இடைவெளி இவைகளால் ஏற்ப்படுத்தப்பட்ட காட்சி பிழைகள் உண்மையை அறிந்தால் இவை
மறைந்துவிடும். உண்மை அறிவான பிரம்மத்தின்மீது, அறியாமையால் சுமத்தப்பட்ட மாயையே இவ்வுலகமும், பிரஞ்சமும்.
3. பிரம்மம், உலகைப் படைத்து, காத்து, அழிக்கும் 'கடவுள்' இல்லை. கடவுகளுக்கு நாம் குணங்களைச் சொல்கிறோம். பிரம்மதிற்கு குணங்கள் இல்லை.
ராமாநுஜரின்படி, பிரம்மசூத்திரம்:
1. பிரம்மத்தை ஜடப்பொருள், உயிர், ஈசுவரன், இம்மூன்றும் எப்போதும் இணைந்தே உள்ள இவைகளின் கூட்டு என்று கூறுகிறது. அந்தக் கூட்டான பிரம்மம் ஒன்றே.
2. உலகம் உண்மையில் 'உள்ள' பொருள். காட்டிபிழையல்ல. மாயையல்ல, கனவும் உண்மையே என்று கொள்கிறது.
3. உயிர் பிரம்மத்தை அடைகிற மோட்சம், பிரம்ம ஸாம்யம். அருகில் ஆனால் அதோடு ஐக்கியமல்ல. எந்த நிலையிலும் உயிரிம் ஜடமும் ஈசுவரனின் சரீரப் பொருளாகவே இருக்கும். பூரணமாகக் கலந்துவிடுவது இல்லை.
மத்வரின் படி, பிரம்மசூத்திரம்:
1. உயிர்கள் பல. தங்களுக்குள் வேறுபடுபவை. பிரம்மம் அல்ல அவை. பிரம்மம் ஜடப் பொருள் அல்ல, ஏனெனில் அவை குறைவுள்ளவை.
2. உலக உற்பத்திக்கு பிரம்மம் நிமித்த காரணம் மட்டுமே.
3. குறைவுற்ற ஜீவன் குறையற்ற பிரம்மத்தை அணுகக்கூட முடியாது. மோட்சம் என்பது பிரம்மத்திற்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசங்களை உண்மையாக உணர்வதே.
-சுஜாதா
No comments:
Post a Comment