தேன் இனிப்பு பற்றி நான் அனுபவித்திருக்கிறேன். உங்கள் தேன் அனுபவம் எனக்கு புரிகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். சாதாரண உணவு விஷயமே மொழியால் பரிமாறப்பட முடியாமல் இருக்க, சூட்சுமத்தில் அறியும் கடவுள் அனுபவம் எப்படி பரிமாற முடியும்??
ஆனால் அப்படி வெளியிடச் செய்த விஷயம் தான் புராணங்கள், இதிகாசங்கள், இன்ன பிற கதைகள். இவை கடவுளை முழுமையாகச் சொல்வன அல்ல. ஆனால் மெல்ல வெளிச்சம் போட்டுக் காட்டுபவை. இருண்ட மனதில் விளக்கேற்றி வைப்பவை.
அந்த கதைகள் கடவுள் அல்ல, கை விளக்குகளே. அந்த விளக்கின் ஒளியால் கடவுளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ராமாயணத்தின் மூலம் ராமர் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ராமரை நகருக்குள் தேட வேண்டும். கிருஷ்ணர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ராமரும் கிருஷ்ணரும் உதாரணங்கள் தான். நீரில் தோன்றும் நிலவு பிம்பங்கள் தான். கைக்கு எட்டும் தூரத்தில் நிலவு பிம்பம் தெரிந்தாலும். நிலவு வெகுதூரத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- எழுத்து சித்தர் ' பாலக்குமாரன்'