”திடீரென்று கூட்டமாக ஒலிக்கிற பிராத்தனை கீதங்கள் ஏதும் கேட்கவில்லை. வெட்டவெளி. பேரமைதி. அவ்வுளவுதான்.
அங்கே நான் கூட இல்லை. என் மனம் மட்டும்தான் இருந்தது. ஒரு தும்பி போல அந்தப் பரந்த வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது மனம். உடலை விட்டு அது எப்போது புறப்பட்டுப் போனது என்று நிச்சியமாய்த் தெரியவில்லை. அடடே! உடலை விட்டு மனம் புறப்பட்டது குறித்துச் சிந்திக்கிறேன் என்றால் இத்தனை நாள் சிந்தனை என்கிற காரியத்தைச் செய்துவந்தது மனம் இல்லையா? உடல் தானா? அல்லது எனக்கு என்றுமே வசப்பட்டிராத என் ஆன்மாவா?
என் ஆன்மா! சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஹிந்து தர்மம் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரே கம்யுனிசச் சிந்தனை அதுதான். ஓர் ஆன்மாதான். ஆனால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்ல எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.”
”முட்டாள்! நீ இறந்த பின் இந்த மனம் உன் கூட வருமொன்றா நினைக்கிறாய்? இத்தனை வருஷங்களாகல் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கவா உன்னை இத்தனை கஷ்டப்பட்டு இயற்க்கை கடைத்தேற்றுகிறது? அந்தப் பக்கம் போன உடனேயே உனக்கு அங்கே புதிய சட்டை போட்டு விடுவார்கள். புதிய பெயர். புதிய உடல். புதிய ஆன்மா. புதிய முகவரி. உன் கேள்விகள் இருதிவரை விடையில்லாதவைகள்.”
“நான் நாத்திகனாக அறியப்பட்டவனே தவிர நாத்திகன் இல்லை என்பது எனக்கே வெகு தாமதமாகத்தான் புரிந்தது”.
“நான் நாத்திகன் இல்லை. தெரியுமா உங்களுக்கு? இது ஆத்திகத்தின் மிகக் கனிந்த நிலை. சடங்குகளைத் துறப்பது. நியதிகளைத் துறப்பது. நிஷ்டைகளைத் துறப்பது. இதன் எல்லையில் இன்னொன்று இருக்கிறது. கடவுளைத் துறப்பது. அது மறுப்பது இல்லை. மறப்பது. என்னை மறந்த நிலையில் கடவுளை நினைப்பதற்குச் சமானம், கடவுளை மறந்து என்னை நினைப்பது. என்னை என்றால் என் உடலை அல்ல. மனத்தை அல்ல. ஆன்மாவையா என்றால் நிச்சியமாகச் தெரியவில்லை.”
- பா.ராகவன்.