அடேய்... இதுதானா என்கிற புன்னகை உதட்டில் நெளிந்தது.
கடவுளே.. இப்படி என்னைப் பார்க்கவே தெரியவில்லையே. தேவையற்று நிறைய பேசியிருக்கிறேனே. அனாவசியமாய் நிறைய உளறியிருக்கிறேனே. கொஞ்சம் கூட எவரும் கேட்காமல் தன்னைப் பற்றியே புலம்பியிருக்கிறேனே. புலம்பவும், கேட்கவும், பேசவும் இங்கு எதுவுமில்லையே. எல்லாமும் சரியாகத்தானே இருக்கிறது. எல்லாமும் நேராகத்தானே நடக்கிறது. இது எப்படி நடந்தாலும் எனக்கென்ன கவலை என்று ஒரு மலர்ச்சியை, ஒரு சுதந்திரத்தை அவர் மனம் உணர்ந்தது. மறுபடியும் உடம்புக்குள் போய் மனம் ஒட்டிக் கொண்டது.
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற ஒரு அமைதியை மக்கள் எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எல்லாமும் துன்பமயம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஊனக் கண்களுக்கு இந்த நிம்மதி புரியவில்லை. தனக்குள்ளே பார்க்க எவரும் அறியாதவைகளாக இருக்கிறார்கள். உலகத்தைப் பார்க்க உடம்புக்குள் உட்கார்ந்திருக்கின்ற மனதுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
உடம்பை உதறி உடம்பிலிருந்து வெளியேறி நின்ற மனம், உடம்பை ஒரு பொருட்டாகக் கருதாத மனம், உடம்பினால் ஏற்படுகின்ற விதிகளை புறக்கணித்துவிட்ட ஒரு மனம், சகலரையும் தெளிவாகப் பார்க்கிறது.
உடம்பில்லாத அந்த மனம், எல்லா உடம்புகளையும் தன் உடம்பாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த மனம் தன்னை பறவையாய், விலங்காய், தாவரமாய் மற்ற மனிதர்களாய், நண்பர்களாய், எதிரிகளாய், மனைவியாய், மகனாய் பார்க்கிறது. அவர்களின் மனம் பிடிபட, இந்த மனம் மிகத் தெளிவாக, மிக நேர்மையாக அவர்களை அணூகுகிறது. நம்முடைய அணுகுமுறையில் பல்வேறூ சமயம் நேர்மையில்லை. நேர்மையில்லாததால் பொய் தலை விரித்தாடுகிறது. பொய் இடையறாது தலைவிரித்தாடுவதால் எது, என்ன, எப்படி என்பது புரியவேயில்லை. இந்தப் புரியாத புதிர்தான் வாழ்க்கையின் மிகப் பெரிய இம்சை. சகிக்க முடியாத வலி.
மனம் உடம்பிலிருந்து வெளியேறி நிற்பது என்றால் என்ன?
அதை வார்த்தையில் சொல்ல முடியாது. அது புது அனுபவம். திடீரேன்று ஏற்படும் அனுபவம். ஒருமுறை அது ஏற்பட்டுவிட்டால் உலக வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் முற்றிலும் மாறுபாடு அடையும்.
இதுவே ஞானம். இதுவே தெளிவு. இதற்குப் பிறுகு வெகுதூரம்.. வெகுதூரம் கடவுளை நோக்கிப் பயணப்பட வேண்டும். இதைத் தெரியாதவர் கடவுளை நோக்கி ஒரு அங்குலம் கூட எடுத்து வைக்க முடியாது.
சக்கரவாஹம்,
எழுத்து சித்தர் பாலகுமாரன்.
எழுத்து சித்தர் பாலகுமாரன்.