இது சாத்தியமில்லை என்பதை அறிந்துகொண்டால், வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாக வழியில்லை.
உங்கள் மனைவி, நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீகள்.
உங்கள் மனைவிக்கும் அப்படி நினைக்க உரிமை உண்டு.
உங்களால் அப்படி இருக்க முடியுமா?
மற்றவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியே உங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் நினைக்க உரிமை உண்டு.
மற்றவர்கள் எதிர்பார்ப்பின்படி உங்களால் இருக்க முடியுமா?
முடியாதென்றால், மற்றவர்களைப் பற்றி அப்படி நினைக்க உங்களுக்கு ஏது உரிமை?
மனிதர்கள் கயிற்றில் ஆடும் பொம்மைகள் அல்லர். குறிப்பிட்ட வேலைகளிக்காகத் தயாரிக்கப்பட்ட ரோபாட்டுகளும் அல்லர்.
தான் நினைக்கிறபடியே மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் மூடனாக இருக்கிறான். வன்முறையாளனாகவும் இருக்கிறான்.
அவன் படைப்பின் ரகசியத்தை அறியாதவனாக இருக்கிறான்.
படைப்பு என்பதே வகைகளால் ஆனது. வகைகள் வாழ்க்கைக்குத் தேவை.
வகைகளால் இந்த உலகம் அழகாக இருக்கிறது.
உலகம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால் எப்படி இருக்கும்?
உணவில் அறுசுவையை விரும்புகிறோம். உணர்வில் நவரசத்தை விரும்புகிறோம்.
உங்களுக்கு பிடித்த உணவுதான் மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமா?
உங்கள் ரசனைதான் எல்லாருக்கும் இருக்க வேண்டுமா?
வாழ்க்கையில் வகைகளை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் எதிர்பாராதவற்றை எதிர்பார்க்க வேண்டும். அவை நேரும்போது எதிர்கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் சிலிர்ப்பை, இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
இந்த உலகத்தை நீங்கள் படைக்கவில்லை. எனவே, நீங்கள் விரும்புகிறபடிதான் இந்த உலகம் இருக்க வேண்டும் என்று நினைக்க உங்களுக்கு உரிமை இல்லை.
-கவிக்கோ அப்துல் ரகுமான்