Sunday, June 29, 2008

அவதாரம்...

அவதாரம்:


ரூபமற்ற, நாமமற்ற, அனாதியான, பொருளற்ற, பொருளுக்கு அப்பாற்பட்ட அந்த வஸ்து, அதாவது வஸ்து என்ற ஒன்றல்லாத, பலவும் அல்லாத அந்த 'அது' சிந்திக்க ஆரம்பித்தது; தன்னை உணர ஆரம்பித்தது; தன்னை உணர்ந்து தன்னையே உணரவும் அஞ்ச ஆரம்பித்தது; பூர்த்தியாகாத ஆசை வித்துக்கள் மாதிரி கொடுமையின் குரூரத்தின் தன்மைகள் தன் சித்த சாகரத்தின் அடியில் அமுங்கியும் குமிழிவிட்டு, பிரபஞ்சம் என்ற தன்னையே கண்டு அஞ்சியது. தன்னையே நோக்கியது.

தானான மனிதர்கள், தன்னுள் ஆன மனிதர்கள், தன்னைக் கையேடுத்து வணங்கி தன்மீதே இலட்சியங்களைச் சுமத்தி, நன்மை நலம் மோட்சம் என்ற கோவில்களைக் கட்டுவது கண்டு கண்ணீர் விட்டது. அவர்கள் நம்புவது தான் அல்ல என்று அவர்களிடம் அறிவிக்க விரும்பியது, துடித்தது.

. . . .


ஆற்றங்கரைப் பிள்ளையார்:


ஊழிக் காலத்திற்க்கு முன்...

'கி.மு.' க்கள் (கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்) என்ற எட்டாத சரித்திரதின் அடிவானம்.

அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.

கரையில் ஒரு பிள்ளையார்.

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும் மணற்குன்றுகளும் அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.

ஒரு கிழவர் வந்தார்.

பிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்தினார். பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றியது.

'சமூகழம்' என்ற ஒரு மேடையைக் கட்டி, அதன்மேல் பிள்ளையாரைக் குடியேற்றினார். அவருக்கு நிழலுக்காகவும், அவரைப் பேய் பிடியாதிருக்கவும், 'சமய தர்மம்' என்ற அரச மரத்தையும், 'ராஜ தர்மம்' என்ற வேப்ப மரத்தையும் நட்டு
வைத்தார்.

வெள்ளத்தின் அமோகமான வண்டல்களினால் இரண்டு மரங்களும் செழித்தோங்கி வளர்ந்தன.பிள்ளையாருக்கு இன்பம் என்பது என்னவென்று தெரிந்தது.

தனக்கு உதவி செய்த பெரியாரின் ஞாபகார்த்தமாக 'மனிதன்' என்ற பெயரை தன்க்குச் சூடிக்கொண்டார்.

. . .

புதுமைப்பித்தன்(1934)