"ஏம்மா, எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவங்கதான் சந்நியாசி ஆகணுமாம்மா?".. சிரித்துக்கொண்டே அந்தச் சிறிவனை அழைத்தவர். " தம்பி! நானும் உன்னை மாதிரி ஒரு காலத்துல இருந்தவந்தான்" என்று வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார்.
'இவரைப் போய் அழைத்து வந்தோமே. சுத்தப் பரதேசியா இருப்பார் போல இருக்கே' என்று அவள் நினைத்துக்கொண்டேன்.
அவர் போகும் வழியில் நினைத்துச் சிரித்துக்கொண்டார். 'பாவம் அந்தப் பெண்! சந்நியாசம் என்பது தப்பிக்கிறதுன்னு நெனைச்சிருக்கா. அவளுக்கு அது விடுதலைன்னு தெரியலை. விஞ்ஞானம் புரியாதவன் சந்நியாசியில்ல. விஞ்ஞானம் எங்கே முடியும்னு அவனுக்கு தெரியும். கணக்கு வராததால, காவி உடுத்தறவன் இல்ல. கணக்கு எல்லா நேரத்திலேயும் ஓரே விடையத்தராதுன்னு அவனுக்குத் தெரியும். அவனுக்கு கலைகள் பற்றிய புரிதல் அதீதம். அவனால் சிலந்தி வலையிலும் இருத்தலின் இனிமையை உணர முடியும். முடியாததால் விலகுவது அல்ல துறவு. கைக்கு அருகில் வந்ததை வேண்டாம் என்று விலகும் மனநிலை அது. உலகத்திலிருந்து ஓடி ஒதுங்குவது அல்ல சந்நியாசம். அது, உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாக, ஒவ்வொரு துளியாக உள்ளே வாங்கி, நாமே உலகமாக மாறிப்போவது. இப்படி எதுவும் வராதவர்கள் மீது துறவு திணிக்கப்படுவதால்தான், காவியுடை கேவலப்பட்டுப்ப் போனது. அது அவலங்களை மறைக்கும் கேடயமாகவும் கவசமாகவும் மாறிப்போனது.
பாவம்! என்னென்னவோ எதிர் பார்த்திருப்பாள். மடங்கள் முட்டாள்களின் கூடாரமாகவும், வணங்காதவர்களுடைய இருப்பிடமாகவும் மாறினால், துறவு தூஷிக்கப்படுமே அல்லாமல் தொழப்படுமா? வாழ்க்கையின் மீது உள்ள வெறுப்பாலும் விரக்தியாலும் வந்தால், அது எப்படி சந்நியாசமாகும்? அது ஆனந்ததால் அல்லவா முகிழ்க்க வேண்டும். விஞ்ஞானிகளைக் காட்டிலும் கலாரசனையிடனும், இலக்கியவாதிகளைக் காட்டிலும் மொழியின் மேன்மையுடனும், லோகாயதவாதிகளைக் காட்டிலும் பொருள்முதல் வாதத்தைப் புரிந்துகொண்டவர்கள் தான் முழுமையான துறவிகளாக இருக்க முடியும். மகனை பயமுறுத்தக்கூடக் அவள் அப்படிக் கூறியிருக்கக் கூடாது.
அவர் நடந்துகொண்டு இருந்தார். அந்த ஊரைத் தாண்டி அவருடைய கால்கள் போய்க்கொண்டு இருந்தன். எந்த மரம் அவருக்கு அடுத்த அமர்வுக்கு நிழல் தரப்போகிறதோ!..
-வெ.இறையன்பு.