Tuesday, November 21, 2006

கடவுளின் பங்கு...

நாத்திகம் தத்துவ நோக்கில் வடநாட்டில் சார்வாகம், நிரீஸ்வர சாங்கியம் எனவும், தமிழகத்தில் உலகாய்தம் (உலகை ஆய்தல்), பூத வாதம் (ஐம்பூதத்து இயற்க்கை) தேகான்மவாதம் எனவும் விதந்தோதப்படும். ஆத்திகம் என்றால் பண்டைய இந்தியாவில் வேதத்தின் தலைமையை ஏற்றுக் கொள்வது என்றே பொருள்.

'கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி' எனக் கடுமையாகச் சாடுவார் தந்தை பெரியார்.

'அச்சமே கடவுளை உருவாக்குகிறது. அச்சம் இல்லை எனவே கடவுளும் இல்லை' என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இரண்டின் சாராம்சமும் சந்திக்கும் புள்ளி அச்சமே. அச்சவுண்ர்வின் தொடர் நீட்சிதான் வழிபாட்டுணர்வு என்கிற மையமே. 'மரண பயத்தில் எழுந்த நம்பிக்கையே சமயம்' என்பார் புதுமைப்பித்தன்.

ஓஷோவோ, 'மானுடத்தின் ஒட்டுமொத்தா எதிரி கடவுளே. நம்மை இந்துவென்றும், முகமதியரென்றும், கிறித்துவ ரென்றும் மத ரீதியாகப் பிரித்தது கடவுள்தானே?' எனக் கேள்வி எழுப்புவார். 'கடவுள் செத்துவட்டார்
என்றறிவித்தார் நீய்ட்ஷே எனும் தத்துவஞானி.

சின்னக்கவலைகள் தனைத் தின்னத் தகாதென தேவியைச் சரண்புகுந்தான் பாரதி 'நித்திய சூன்யமாக இருக்கிறதே, கை கூப்பித் தொழுவதற்கு எதுவுமே இல்லையே' என அல்லடினான் சிறுகதைச் சித்தன் புதுமைப்பித்தான்.

இந்த நித்திய சூன்யம் - இதன் வெற்றிடம் - இதுதான் முக்கியம். ஆண்டவன்மேலே பாரத்தைப் போட்டுவிட்டு அமைதி அடையும் கொடுப்பினை ஆத்திகனுக்கு மட்டுமே வாய்க்கின்றது.

நான் போதிப்பது மதத்தைப் பற்றியல்ல, சமையத்தன்மை குறித்து என்கிற தலைப்பில் ஓஷோ ஒரு நூலே எழுதியுள்ளார்.

மதவெறி என்பது நிராகரித்தாக வேண்டிய ஒன்றே. வறட்டு நாத்திகமோ போதுமானதாக இல்லை. இங்கே சமயத்தன்மை என்பது தவிர்க்க முடியாத தேவையாக நீடிக்கிறது. இத்தேவையின் இன்றியமையாமையே இங்கே கடவுளைத் தீர்மானிப்பதாகி விடுகிறது. இதனாலேயே கடவுள் இன்னும் சாகவில்லை.


[வாழ்வாங்கு வாழும் கலை- பொதிகைச்சித்தர்]

No comments: