Tuesday, January 27, 2009

எதிர்பாராததின் இன்பம்...

இன்று பிரச்னைக்கெல்லாம் காரணம் - மற்றவர்கள் நாம் எதிர்பார்க்கும்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.

இது சாத்தியமில்லை என்பதை அறிந்துகொண்டால், வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாக வழியில்லை.

உங்கள் மனைவி, நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீகள்.

உங்கள் மனைவிக்கும் அப்படி நினைக்க உரிமை உண்டு.

உங்களால் அப்படி இருக்க முடியுமா?

மற்றவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியே உங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் நினைக்க உரிமை உண்டு.

மற்றவர்கள் எதிர்பார்ப்பின்படி உங்களால் இருக்க முடியுமா?

முடியாதென்றால், மற்றவர்களைப் பற்றி அப்படி நினைக்க உங்களுக்கு ஏது உரிமை?

மனிதர்கள் கயிற்றில் ஆடும் பொம்மைகள் அல்லர். குறிப்பிட்ட வேலைகளிக்காகத் தயாரிக்கப்பட்ட ரோபாட்டுகளும் அல்லர்.

தான் நினைக்கிறபடியே மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் மூடனாக இருக்கிறான். வன்முறையாளனாகவும் இருக்கிறான்.

அவன் படைப்பின் ரகசியத்தை அறியாதவனாக இருக்கிறான்.

படைப்பு என்பதே வகைகளால் ஆனது. வகைகள் வாழ்க்கைக்குத் தேவை.

வகைகளால் இந்த உலகம் அழகாக இருக்கிறது.

உலகம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால் எப்படி இருக்கும்?

உணவில் அறுசுவையை விரும்புகிறோம். உணர்வில் நவரசத்தை விரும்புகிறோம்.

உங்களுக்கு பிடித்த உணவுதான் மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமா?

உங்கள் ரசனைதான் எல்லாருக்கும் இருக்க வேண்டுமா?

வாழ்க்கையில் வகைகளை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எதிர்பாராதவற்றை எதிர்பார்க்க வேண்டும். அவை நேரும்போது எதிர்கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் சிலிர்ப்பை, இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

இந்த உலகத்தை நீங்கள் படைக்கவில்லை. எனவே, நீங்கள் விரும்புகிறபடிதான் இந்த உலகம் இருக்க வேண்டும் என்று நினைக்க உங்களுக்கு உரிமை இல்லை.

-கவிக்கோ அப்துல் ரகுமான்

நடமாடும் கோவில்....

நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் நம் விருப்பத்தைப் பல வழிகளில் வெளிப்படுத்திகிறோம்.

அவருக்கு அன்பளிப்புத் தருகிறோம். எதாவது தேவையென்றால் நிறைவேற்றுகிறோம், துன்பம் நேர்ந்தால் உதவுகிறோம். வீட்டுக்கு அழைத்து, விருந்து தருகிறோம்.

இறைவன்மீது நமக்கு இருக்கும் விருப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது?

திருமூலர் ஓர் அருமையான வழியைச் சொல்கிறார்.

இறைவனுக்கு நீ எதாவது கொடுக்க விரும்பினால், தேவைப்பட்ட மனிதர்களுக்கு கொடு. அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார்.

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”


கோயில்கள் இரண்டு வகை. ஒன்று - மண், மரம், கல் போன்ற பொருள்களால் கட்டுவது. மற்றொன்று மனித உடல்.

படமாடம் என்றால், கூடாரம் என்று பொருள்.

பழங்காலத்தில் ஏதேனும் ஒரு வழிபாடு பொருளை வத்து, அதன்மீது துனி போன்ற பொருள்களால் கூடாரம் போன்று அமைப்பார்கள்.

அதனால் திருமூலர் படமாடக் கோயில் என்கிறார். இங்கே படமாடக் கோயில் என்பது, கட்டப்பட்ட எல்லாக் கோயில்களையும் குறிக்கும்.

‘நடமாடும் கோயில்’ என்ற சொற்களால் ஒரு பெரிய ஞானக் கருத்தை உண்ர்த்த விரும்புகிறார் திருமூலர்.

மனிதனே நடமாடும் கோயிலாக இருக்கிறான்.

“ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் பலன் ஐந்தும் காளா மணிவிளக்கே...”

என்றும் சொல்கிறார் திருமூலர்.

மனித உடல்தான் மகேசனின் ஆலயம் என்பதை உணர்த்துவதற்காகதான், கோயில்கள் மனித உடல் அமைப்பில் கட்டப்படுகின்றன.

மனிதன் தனக்குள்ளேயே இறைவனை வைத்துக்கொண்டு, அவனை வழிபட வெளியே செல்கிறான்.

நடமாடும் கோயில், நடமாடாத கோயிலுக்குப் போகிறது.
உயிருடைய கோயில், உயிரில்லாத கோயிலுக்குப் போகிறது.
கோயில், கோயிலை வண்ங்கிறது.
‘நடமாடும் கோயில்’ என்ற சொற்களில் இவ்வளவும் தொனிக்கிறது.

‘உனக்குள் இறைவன் இருப்பதைப் போலவே, உன் சக மனிதனுக்குள்ளும் இறைவன் இருகிறான். எனவே, இறைவனுக்கு நீ ஏதேனும் தர விரும்பினால், சக மனிதனுக்கு கொடு. அவனுக்கு உள்ளே இருக்கும் இறைவன் அதைப் பெற்றுக்கொள்வான்’ என்கிறார் திருமூலர்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்

Saturday, July 19, 2008

பிரம்மசூத்திரம்


பிரம்மசூத்திரம் என்பது வேதாந்தம் என்னும் உபநிஷதுகளின் வாக்கியங்களைக் குறிப்பிட்டு 'பிரம்மம்' என்னும் இறுதி உண்மையை அறிய முயழும் சிறிய வாக்கியங்களின் தொகுப்பு. இது பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற எந்தக் கடவுளையும் பற்றியதல்ல. பிரபஞ்சத்தின் இறுது உண்மையையும் ஆதாரத்தையும் ஆரம்பத்தையும் மனித சிருஷ்டியையும் ஜீவனையும் ஆத்மாவையும் வேறுபடுத்திக் காட்டி ஆராயும் பாதராயணரின் நூல்.

பிரம்மசூத்திரம் மூலம் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை. இந்தப் பிரஞ்சம் எப்படி உருவாயிற்று? யாரால் உருவானது? நாம் எப்படி உருவானோம்? இறந்த பின் என்ன ஆகிறோம்? மறுபிறவி எப்படி நிகழ்கிறது? மோட்சம் என்பது என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம்
விடைகளை ஒருவாறு துணிவுடன் தீர்மானிக்க முற்படும் மிக முக்கியமான நூல்.

சங்கரரின்படி, பிரம்ம சூத்திரங்கள் தெரிவிக்கும் முக்கியக் கருத்துகள் மூன்று:

1. பிரம்ம ஒன்றே ஒன்றுதான் உண்மை. அதுவும் 'நாம்' என்னும் ஜீவாத்மாவும் கலந்து வேறுபாடே இல்லாத ஒன்றே.

2. பெயர், உரு இவைகளால் வெவ்வேறு பொருள்களாய் காணும் இவ்வுலகம் தோற்றமே. காலம், இடைவெளி இவைகளால் ஏற்ப்படுத்தப்பட்ட காட்சி பிழைகள் உண்மையை அறிந்தால் இவை
மறைந்துவிடும். உண்மை அறிவான பிரம்மத்தின்மீது, அறியாமையால் சுமத்தப்பட்ட மாயையே இவ்வுலகமும், பிரஞ்சமும்.

3. பிரம்மம், உலகைப் படைத்து, காத்து, அழிக்கும் 'கடவுள்' இல்லை. கடவுகளுக்கு நாம் குணங்களைச் சொல்கிறோம். பிரம்மதிற்கு குணங்கள் இல்லை.

ராமாநுஜரின்படி, பிரம்மசூத்திரம்:

1. பிரம்மத்தை ஜடப்பொருள், உயிர், ஈசுவரன், இம்மூன்றும் எப்போதும் இணைந்தே உள்ள இவைகளின் கூட்டு என்று கூறுகிறது. அந்தக் கூட்டான பிரம்மம் ஒன்றே.

2. உலகம் உண்மையில் 'உள்ள' பொருள். காட்டிபிழையல்ல. மாயையல்ல, கனவும் உண்மையே என்று கொள்கிறது.

3. உயிர் பிரம்மத்தை அடைகிற மோட்சம், பிரம்ம ஸாம்யம். அருகில் ஆனால் அதோடு ஐக்கியமல்ல. எந்த நிலையிலும் உயிரிம் ஜடமும் ஈசுவரனின் சரீரப் பொருளாகவே இருக்கும். பூரணமாகக் கலந்துவிடுவது இல்லை.

மத்வரின் படி, பிரம்மசூத்திரம்:

1. உயிர்கள் பல. தங்களுக்குள் வேறுபடுபவை. பிரம்மம் அல்ல அவை. பிரம்மம் ஜடப் பொருள் அல்ல, ஏனெனில் அவை குறைவுள்ளவை.

2. உலக உற்பத்திக்கு பிரம்மம் நிமித்த காரணம் மட்டுமே.

3. குறைவுற்ற ஜீவன் குறையற்ற பிரம்மத்தை அணுகக்கூட முடியாது. மோட்சம் என்பது பிரம்மத்திற்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசங்களை உண்மையாக உணர்வதே.

-சுஜாதா